செவ்வாய், 14 ஜூன், 2016

வன்னிய அரசு : சாதிய தமிழ் தேசியவாதிகள் இருக்கும் வரை தமிழ்தேசியம் உருப்படபோவதில்லை,

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் நேற்று புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், ஈழத்தின் நடந்த போரை முன்வைத்து பாமக எம்.பி., எம்.எல்.ஏக்கள் பதவி விலகலாம் என்று ராமதாசிடம் அவர் சொன்னதற்கு, ‘என் மகன் அமைச்சராய் இருப்பது உனக்கு பிடிக்கவில்லையா? நாயே’ என்று தன்னை கடுமையாக ராமதாஸ் கேட்டதாக பதிவு செய்துள்ளார். தொடர்ந்து அதே பேட்டியில் புலிகளின் அரசியல்பிரிவு தலைவர் நடேசன் அவர்களிடமிருந்து போர்முனையிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பை ஏற்று அவருடன் பேசமாட்டேன் என்று ராமதாஸ் மறுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு தூக்கு தேதி குறிக்கப்படிருந்த நிலையில் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மறைமலைநகரில் ‘மரண தண்டனை ஒழிப்பு மாநாடு’ நடத்தப்பட்டது.

அப்போது தான் அதே கோரிக்கைக்காக காஞ்சி மக்கள் மன்றம் தங்கை செங்கொடி உயிர்தியாகம் செய்த செய்தி அந்த மாநாட்டு மேடைக்கு வந்து சேர்ந்தது. தங்கையின் தியாகத்தால் தமிழகமே சாதி மத வேறுபாடுகளைக் கடந்து தமிழர் என்னும் அடையாளத்தோடு ஒன்றினைந்து மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்தது. அரசும் பணிந்தது. பொறுக்குமா ராமதாசுக்கு? அடுத்த வருடமே தனது குடும்பத்தின் நலனுக்காக தர்மபுரியில் மூன்று சேரிகளை கொளுத்தினார்கள், இளவரசனை கொன்றார்கள். தமிழகம் முழுவதும் தலித்துகளுக்கெதிராக தலித்தல்லாதவர்களை அணி திரட்டி சாதிவெறி நஞ்சை பரப்பினார். அடுத்த இரண்டு வருடங்கள் இதையே தொழிலாக கொண்டிருந்தனர்.
ஈழ விடுதலைக்காக ஒரு துரும்பையும் அசைக்காதவர்கள், மரண தண்டனை ஒழிப்பில் அக்கறை இல்லாதவர்கள், தமிழ் தேசிய உணர்வை தங்கள் சாதிய நஞ்சால் கலைத்தவர்கள் இப்போது நல்லவர்கள் வேடம் போட்டு வெளியே வருகிறார்கள். ஈழத்தில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி அதைக் குறித்து எப்பொழுதாவது ஏதாவது பேசியுள்ளாரா? சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்களை என்றாவது நினைத்திருப்பாரா? ஆனால் நேற்று நடைபெற்ற எழுவர் விடுதலைக்கான பேரணியில் எந்தவித கூச்சமும் இல்லாமல் கலந்துக் கொள்கிறார் அன்புமணி ராமதாஸ்.
அந்த பேரணியில் பங்கெடுத்த தமிழ்தேசிய உணர்வாளர்கள், மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் என யாருக்கும் இந்த செயல் கூசவில்லையா? கோபம் வரவில்லையா? அவர்களைப் போன்ற தமிழர்க்கு எதிரான சக்திகளை தனிமைப்படுத்துவதற்கு இங்கு யாருக்கும் தோன்றவில்லையா? துணிச்சலில்லையா? ஒருவேளை அன்புமணிக்கு பாவ மன்னிப்பு கொடுத்துவிட்டீர்களா? பேரணியில் எங்கள் அருகிலேயே வந்த அவரை பார்த்தபோது அவ்வளவு அருவருப்பாக இருந்தது.
இதுகூட கோரமான தங்கள் சாதிய முகத்தை புதுப்பிக்கும் செயல்திட்டத்தில் ஒன்றான ‘முதல்வர் வேட்பாளர்’ ஸ்கீமுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்ட களத்தை பயன்படுத்தியுள்ளார் அன்புமணி. நாளைக்கு அதே ஸ்கீமுக்காக வேலூர் சிறை சென்று நம் தோழர்களை சந்தித்தாலும் சந்திப்பார். மிகச்சிறப்பாக அமைந்த விருந்தின் இலை ஓரத்தில் சிறிது நரகல் வைக்கப்பட்டது போல இருந்தது அவர்களின் பங்கேற்பு. சாதிய தமிழ் தேசியவாதிகள் இருக்கும் வரை தமிழ்தேசியம் இங்கு உருப்படபோவதில்லை,
வன்னி அரசு.  thetimestamil.com

கருத்துகள் இல்லை: